search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஆசியா மரியம்"

    நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர் கூட்டங்கள் நடத்த இணையதளம் வாயிலாக அனுமதி பெறலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் ஆணையத்தின் ஸ்மார்ட் போன் செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவது குறித்த அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கூட்டங்கள் நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும், பிரசார வாகன பயன்பாடு உள்ளி்ட்ட பல்வேறு அனுமதிகளை பெற ஒற்றை சாளர முறையில் சுவிதா என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. www.suvidha.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கூட்டங்கள் நடத்துவதற்காகவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும், பிரசார வாகன பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர், காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் பரிசீலனை செய்து அனுமதியினை அந்த இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளது.

    மேலும், வாக்காளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்களை தெரிவிக்க சி-விஜில் என்ற ஸ்மார்ட்போன் செயலியினையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்து உள்ளது. இந்த செயலியை தேவைப்படுபவர்கள் பதிவிறக்கம் செய்து தங்களது ஸ்மார்ட் போனில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேர்தல் விதிமுறைகள் குறித்து தாங்கள் ஏதேனும் விதிமீறல்களை பார்வையிட்டால் அதனை குறிப்பிட்ட செயலியில் உள்ள பொத்தானை அழுத்தி புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ நேரடியாக பதிவு செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த புகாரானது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த இடத்தின் ழுழு விவரத்தோடு வந்து சேரும். அந்த புகாரானது சம்பந்தப்பட்ட பகுதியின் பறக்கும் படையினருக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்று புகாரின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பயிற்சி வகுப்பில் தேசிய தகவல் மைய அலுவலர் செல்வகுமார், தேர்தல் கணினி அலுவலர் சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிராந்தி குமார், மணிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    சேந்தமங்கலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
    மார்ச்:

    சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை அருகே உள்ள புதிய பஸ் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அதனை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கொடி அசைத்து தொடங்கி வைத்து உடன் சென்றார்.

    இந்த ஊர்வலம் பெரிய தேர்வீதி, மெயின் ரோடு வழியாக சங்கொலி நிலையம் வரை சென்று பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்ற துண்டு பிரசுரத்தை வழங்கினர்.

    மேலும் அனைவரும் வாக்களிப்போம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம், கையூட்டு வாங்காமல் வாக்களிப்போம், மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும், உங்களின் எதிர்காலத்தின் குரல் உங்கள் ஓட்டு என்று பல பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    ஊர்வலத்தில் எருமப்பட்டி ரெங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள், சேந்தமங்கலம் மண்டல துணை தாசில்தார் வசந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோ உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் கண்ணா செய்திருந்தார்.
    நாமக்கல்லில் நேற்று நகர சலவை தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் பூங்கா சாலையில் நகர சலவை தொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். பொருளாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

    இதில் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சலவை தொழிலாளர்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் இலவச சலவை பெட்டி, தையல் எந்திரம், நடமாடும் சலவையகம் மற்றும் சலவை நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடன் வழங்கிட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளில் சலவைத்தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலில் தனித்தொகுதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நாமக்கல் நகர சலவை தொழிலாளர்கள் மத்திய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்து சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
    கரியபெருமாள்புதூரில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #jallikattu
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா கரியபெருமாள்புதூரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டார்.

    மேலும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டு இருப்பதையும், காளைகள் வெளியேறும் இடத்தில் அதன் உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய் நார்கள் மைதானத்தில் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைக்க ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அறிவுறுத்தி உள்ள விதிமுறைகளின்படி தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் பிரகாசம் உள்பட அரசு அலுவலர்கள், ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். #jallikattu
    வனங்களை பாதுகாக்க பொதுமக்கள் உறுதி ஏற்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த வன உயிரின வார விழாவில் கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா நடந்தது. விழாவிற்கு நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி முதல்வர் சுகுணா, விலங்கியல் துறை தலைவர் சர்மிளா பானு ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:-

    வனங்கள், வன உயிரினங்களை அழித்தால் சூழல் சமநிலை பாதிப்பு ஏற்படும். விவசாயத்தில் பெருமளவில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால், பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் திடீர் திடீரென புது விதமான நோய்கள் வருகின்றன. இயற்கையை அழிப்பதால் எதிர்விளைவுகளை சந்தித்து வருகிறோம். வன வளம் சிறப்பாக இருந்தால் தான் மழைப்பொழிவு இருக்கும்.

    வன வளத்தை பாதுகாப்பது வன உயிரினங்கள். இதனால் பொதுமக்கள் ஒவ்வொருவரும் வனம், வன உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தமாட்டோம் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். வனங்களை பாதுகாக்க பொதுமக்கள் உறுதி ஏற்க வேண்டும்.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பேசியதாவது:-

    விலங்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை அதிகம். காவல்துறையை காட்டிலும் வனத்துறைக்கு வன வளங்கள், உயிரினங்களை பாதுகாக்க கூடுதல் அதிகாரம் உள்ளது. வன உயிரினங்களின் வாழ்விடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு அவற்றை துன்புறுத்தும் செயலில் மனிதர்கள் ஈடுபடக்கூடாது.

    தேனீக்கள் அழிந்துபோனால், 20 ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை அனைத்தையும் கவனத்தில் கொண்டு மனிதர்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வன அலுவலர் காஞ்சனா கூறியதாவது:-

    வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான 350 ஏக்கர் நிலம் 600-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வன உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்ததாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து வன உயிரின வார விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் ஆசியா மரியம் பரிசுகளை வழங்கினார். இதில் வனச்சரக அலுவலர்கள் பெருமாள், ரவிச்சந்திரன், அறிவழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    நாமக்கல் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 98 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொலைதூர கிராம மக்களும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகின்றது. நாமக்கல் மாவட்டம் விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டம் ஆகும். வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், வேளாண் இடுபொருட்கள், விதைகள், மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து, குறைந்த நீரை கொண்டு நிறைந்த மகசூலை பெறுவதோடு நீர் சேமிப்பிற்கும் உதவிட வேண்டும்.

    பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களுக்கு தேவையான வருமான சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்று, விதவை சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட 17 வகையான சான்றிதழ்களையும் வருவாய் துறையின் சார்பில் இருக்கும் இடத்தில் இருந்தே பெறும் வகையில் இ-சேவை மையங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் 37 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 57 ஆயிரத்து 494 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    அதை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அவற்றை உரிய அலுவலரிடம் வழங்கி, அந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இந்த முகாமில் வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்ணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்ரமணியம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    திருச்செங்கோடு வட்டத்தில் நியாய விலைக்கடைகளில் சென்ற கலெக்டர் ஆசியா மரியம் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    திருச்செங்கோடு வட்டம், மண்டக்காபாளையத்தில் செயல்பட்டு வரும் உஞ்சனை மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நியாயவிலைக்கடையை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் ஆசியி மரியம் பொருட்களின் இருப்பு, விற்பனை, மீத இருப்பு, விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ளவும், காகித பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் அரசினால் வழங்கப்பட்டுள்ள அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விற்பனை குறித்து, விற்பனை முனைய கருவியில் (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார்.

    அதைத் தொடர்ந்து டி.கைலாசம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் டி.கைலாசம்பாளையம் நியாயவிலைக்கடை - 1 மற்றும் நியாயவிலைக்கடை - 2, கரட்டுபாளையத்தில் செயல்பட்டு வரும் திருச்செங் கோடு தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக்கடை, கொல்லப் பட்டியில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு தொடக்க வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக்கடை ஆகியவற்றில் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை, பாமாயில், கோதுமை ஆகிய பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்து விற்பனை முனைய கருவியில் (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) பதிவுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பொருட்களின் இருப்பினை மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களின் துணையுடன் சரிபார்த்தார்.

    இந்த ஆய்வுகளின்போது பொதுமக்களிடம் பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா, விற்பனையாளர் சரியாக வருகின்றாரா என்றும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஃபர்ஹத் பேகம், திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் வேலு உட்பட வழங்கல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்லில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வந்தது. இந்த ஜமாபந்திக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இறுதி நாளான நேற்று ஜோடிகை அணியார், சர்வமான்ய அணியார், காதப்பள்ளி உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோர்் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 146 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை வழங்கப்பட்ட நிலங்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பிறப்பு-இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டு சரிபார்த்தார்.

    பின்னர் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு தற்காலிக உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 44 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவையும், 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், 20 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளையும் என மொத்தம் 153 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார்கள் அருள், மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்காது. பிளாஸ்டிக் பைகள் தரையில் வீணாக கிடந்து, பெய்யும் மழை நீரை மண்ணுக்குள் செல்லாமல் தடுக்கின்றது. இதனால் மழைநீர் மண்ணுக்குள் இறங்காமல் ஓடி வீணாகின்றது. தற்போது அனைத்து தேவைகளுக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. இது தவறானதாகும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, அனைத்து தேவைகளுக்கும் துணிப்பைகளை பயன்படுத்த முடியும்.

    பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக செயல்பட்டு தங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் துணிப்பைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் தூய்மையான காற்று மற்றும் சுற்றுச்சூழல் கிடைக்கும்.

    மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி நமக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றன. மரங்கள் அழிந்தால் மனித இனமும் மற்றும் விலங்கினங்களும் சுவாசிக்க ஆக்சிஜன் இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். பூமி வெப்பமயமாகி மழை பெய்யாத நிலை ஏற்படும்.

    எனவே சுற்றுச்சூழலை மேம்படுத்த மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். மாணவ, மாணவிகள் தாங்கள் வைக்கும் மரங்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்கள் வைத்த மரங்களுக்்கும் நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். தான் வைத்த மரக்கன்றானது சில ஆண்டுகளுக்கு பிறகு, மரமாக வளர்ந்து நிற்பதை பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியானது எதனுடனும் ஒப்பிட முடியாததாகும். இந்த ஆர்வத்தை மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கதைகள் மற்றும் நிகழ்வுகள் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரவேண்டும்.

    நமது வீடுகளில் கட்டிடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், மரங்களை வெட்டாமல் வீடுகட்டும் முயற்சியை மேற்கொள்ள மாணவ, மாணவிகள் பெற்றோரை வற்புறுத்த வேண்டும். மேலும் வீடுகளில் துளசி செடி உள்ளிட்ட ஆக்சிஜன் அதிகம் வழங்க கூடிய, செடி வகைகளையும் வளர்த்து வீட்டில் பசுமை சூழலை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் பள்ளி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    மேலும் அவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளையும், ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் துளசி செடிகளையும் வழங்கினார். உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதை நெல் கண்காட்சியினையும், பிளாஸ்டிக் கழிவுகளால் மாணவ, மாணவிகளால் படைக்கப்பட்டிருந்த படைப்புகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அருளரங்கன், பள்ளி தலைமையாசிரியர் மேனகா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×